புதன், 6 ஆகஸ்ட், 2008

பால் பண்ணையின் புரட்ச்சிப் பெண்

சராசரிக்கும் சற்று அதிக மான உயரம். தோற்றத்தில் கம்பீரம், கண்களில் கனிவு, பேச்சில் தெளிவு, செயல்களில் உறுதி என்று ஒரு பெர்ஃபக்ட் சக்ஸஸ் பெண்மணியாய் மிளிர்கிறார் கோவை, ஜயேந்திர சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவி தனலட்சுமி.''எனக்கு விழுந்த ஒவ்வொரு அடிகளுமே பயங்கரமானவை, ஆனால், அந்த அடிகள் தான் என்னை பாஸிட்டிவ் மனுஷியாக்கி உற்சாகத்தோடு உழைக்கத் தேவையான சக்தியைக் கொடுத்தன'' என்கிறார் தனலட்சுமி.கல்லூரிக் காலம் வரை என்னுடைய வாழ்க்கை ஓரளவு சீராகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று அப்பா இறந்துவிட, படிப்பை, பாதியிலேயே விடவேண்டிய சூழ்நிலை. வீட்டிற்கு நான் மூத்த மகள் என்பதால், எனது இரண்டு தங்கைகளையும், தம்பியையும் வளர்க்கவேண்டிய கட்டாயம்.அப்போது தான் ஒரு கோடீஸ்வரக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டேன். பையனும் பிறந்தான். குடும்பம் சீராகப் போய்க்கொண்டிருந்தது.திடீரென்று என் கணவரின் குடும்பத்தில் பயங்கரமான சரிவு ஏற்பட்டது. ஒரே இரவில் என் கணவரின் மில்லையும், டெக்ஸ்ட்டூலையும் தொழிலாளர் நலன் கருதி அரசாங்கமே எடுத்துக்கொண்டது. நாங்கள் இருந்த பங்களாவின் வாட்ச்மேனிலிருந்து வேலைக்காரர்கள் வரை எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் நடையைக் கட்டினார்கள். உறவுகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதற்குப்பின் ஒரு சிறிய வீட்டிற்கு குடும்பத்தோடு குடியேறினேன்.விவசாயம் செய்யக் கூட வழி இல்லாத இரண்டு நிலம் மட்டும் எங்களுக்கு மிஞ்சியது. அந்த நிலத்தில் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது. அதில் தண்ணீர் சுத்தமாக இல்லை.ஆனால் திடீரென்று என் உள்ளுணர்வு ''ஏதோ நல்லது நடக்கப்போகிறது...'' என்று சொன்னது.அதனால் உடனடியாக விவசாய அதிகாரிகளைச் சென்று பார்த்தேன். ''நாட்டு வெடி வைத்து கிணற்றைத் தகர்க்கச் சொன்னார்கள். புளியம்பட்டிக்கும் பக்கத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு நானே சென்று வெடி மருந்தை வாங்கி வந்தேன்.அந்த நாளும் வந்தது. வெடி வைக்கும் முன்பு கிணற்றை உற்றுப் பார்த்தேன். கிணற்றின் பக்கவாட்டுச் சுவற்றில் லேசாகத் தண்ணீர் கசியும் சிறுதுளை என் கண்ணுக்குத் தெரிந்தது. அதனால் பக்கவாட்டில் வெடி வைக்கச்சொன்னேன். அக்கம்பக்கத்தினர் என்னைக் கேலி செய்தார்கள். ஆனால் நான் நம்பிக்கையை விடவில்லை... பக்கவாட்டில் வெடி வைத்தவுடன் தண்ணீர் அருவியாகக் கொட்டியது... ஜெயித்துவிடுவோம் என்கிற நம்பிக்கையும் எனக்குள் வந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்... ''தன்னந்தனியாக விவசாயம் செய்தாலும் பலன் கிடைக்கத் தாமதம் ஆகும் என்று புரிந்தது. பேங்க்கில் லோன் போட்டு 100 மாடுகள் வாங்கி பெரிய அளவில் பால் பண்ணை வைத்தேன். நானும் மாடாய் உழைத்தேன். இதனால் பேங்க் லோனைத் திருப்பிக் கட்டி, வீட்டைப் பெரிதாகக் கட்ட முடிந்தது.என் லட்சியப் பாதை முற்றிலுமாக மாறிப்போனது. அந்த சம்பவத்தால் தான் மாட்டுப்பண்ணையில் வேலை செய்த ஒருவன் என்னிடம் வந்து தனக்குப் பிறந்த குழந்தை ஊனமாக இருப்பதால் நெல்மணி வைத்துக் கொல்லப்போவதாக என்னிடமே சொன்னான். எனக்கு கோபம் கோபமாக வந்தது. கூடவே அவர்கள் மேல் சின்ன வருத்தமும் வந்தது.... கல்வி அறிவு இல்லாததால்தான் இவர்கள் இப்படி அறியாமையுடன் வாழ்கிறார்கள். இவர்கள் போன்ற ஏழைகளின் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் என்ன என்று நினைத்தேன்.... செயல்படுத்தினேன். நான் வைத்திருந்த இன்னொரு நிலத்தை மூன்றே முக்கால் லட்சம் ரூபாய்க்கு விற்றேன். கணவர் கையில் இரண்டு லட்சம் பணத்தைக் கொடுத்து அவரை தொழில் தொடங்கச் சொல்லி விட்டு, ஒண்ணே முக்கால் லட்சத்தை வைத்து ஜயேந்திர சரஸ்வதி வித்யாலயத்தைத் தொடங்கினேன்.சாதாரணப்பள்ளியில் கூடத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கத் தயங்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகள் தான் என் மாணவர்கள். ஏழைக் குழந்தைகள் யூனிபார்ம் போட்டு டைகட்டி ஷ¨வுடன் பள்ளிக்கு ஆசை ஆசையாய் வர ஆரம்பித்தார்கள். கொடுக்க முடிந்தவர்களிடம் வாங்கி, வழியே இல்லாத குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் கொடுத்து இன்று வரை அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்...இங்கு பிளஸ் டூ வரை படித்த குழந்தைகள் வெளிக்கல்லூரிகளுக்குச் சென்று அதிகமான தொகையைக் கட்டமுடியாமல், கேட்ட படிப்பும் கிடைக்காமல் சுவரில் அடித்த பந்துகளாக என்னிடம் திரும்பி வந்தார்கள்.''நீங்களே எங்களுக்கான ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள் என்று, அவர்கள் என்னைக் கேட்க இறைவன் மீது பாரத்தைப் போட்டு கல்லூரி கட்ட ஆரம்பித்தேன். இங்கு கல்லூரி ஆரம்பிக்க விடாமல் சுற்றிலும் இருந்த பல பெரிய கல்வி நிறுவனங்கள் பல விதத்திலும் தடை செய்தார்கள்.ஆனாலும், நான் மனம் தளரவில்லை. விடாமல் முயற்சித்து கல்லூரியையும் ஆரம்பித்தேன். இதற் கிடையில் கணவரின் தொழிலும் கை கொடுக்க ஆரம்பித்தது. கார்களுக்கு டீசல் என்ஜின் பொருத்தும் என் கணவரின் தொழிலில் பல முக்கிய பொறுப்புகளை நானே ஏற்றேன். எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்ட டாட்டா நிறுவனம் தங்களது கார்களின் ஃபைனல் பெர்ஃபாமென்ஸைச் சோதிக்க எங்களிடம் தான் அனுப்பி வைக்கிறது.என் வாழ்க்கையில் இன்னுமொரு சந்தோஷத்தை என்னால் மறக்கவே முடியாது.ஒரு நாள் மாலை டெல்லியில் இருந்து ஹோம் மினிஸ்டரும், மினிஸ்டரும் தொலைபேசியில் அழைத்து, ''நாங்கள் இன்வெஸ்ட்டிகேஜன் செய்ததில் உண்மையிலேயே உங்கள் கல்வி நிறுவனங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி தருவது உண்மை என்று தெரிந்து கொண்டோம். உங்களுக்கு உள்நாடு, வெளிநாடு இரண்டு பக்கமும் உதவித்தொகை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கிறோம்'' என்று சொன்னார்கள். அன்று இறைவன் முன்பு நான் விட்ட கண்ணீருக்கு அளவே இல்லை.என் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற நிறைய மாணவர்களுக்கு நானே தொழிற்சாலையில் வேலை கொடுத்து வருகிறேன். எங்களது கம்பெனியில் பயிற்சி பெற்ற 50_க்கும் அதிகமான பொறியாளர்கள் டாடா கம்பெனியில் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறார்கள்'' என்று பெருமை பொங்கச் சொல்கிறார் தனலட்சுமி.இன்று 10000_க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் தனலட்சுமி, ''பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள். நிறைய உழையுங்கள்... 'வலி'களை உங்கள் முன்னேற்றத்துக்கான 'வழி'களாக்கிக் கொள்ளுங்கள். அது தான் என் வெற்றி மந்திரம்'' என்கிறார். சத்தியமான வார்த்தைகள்!

2 கருத்துகள்:

குட்டிப்பண்ணை சொன்னது…

விடாமுயற்சி ,தன்னம்பிக்கை,கடின உழைப்பு

இருந்தால் எதையும் சாதிக்காலாம்

என்பதற்க்கு தனலட்சுமி அம்மையார் ஒர்

அருமையான எடுத்துக்காட்டு.

பெயரில்லா சொன்னது…

avarkalathu pannai amaividathai ungalal koora moodiuma nanbarea!!!!!