சனி, 19 செப்டம்பர், 2009

இந்தியாவில் பால் உற்பத்தி 11 கோடி டன்!!!

இந்தியாவில் பால் உற்பத்தி 11 கோடி டன்!
சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளது.நடப்பு நிதியாண்டில் நாட்டின் பால் உற்பத்தி 10.50 டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது . இது அடுத்த 2009-2010 நிதியாண்டில் 10.80 வாகஇருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது .இந்தியாவில் பஞ்சாப் ,குஜராத் ,கர்நாடகா,ஆந்திரா,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு அதிகளவில் கலப்பின பசுக்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது .மேலும் இதனால் பால் உற்பத்தியும் இந்த மாநிலங்களில் அதிகரித்துவருகிறது .பஞ்சாப் மாநில அரசு பால்பண்ணை அரய்சியில் ஒரு பசு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் நாற்பது முதல் ஐம்பத்தைந்து லிட்டர் பால் கறக்கிறது.இது நாம் பெருமை பட வேண்டிய செய்தி . இந்த புள்ளிவிவரங்கள் அமெரிக்க வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

கால்நடை இனங்கள்

இந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்
கறவை இனங்கள்:
சாஹிவால்
அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - கிராம சுழலில் : கிலோ - வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ
32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது
கறவை கால இடைவெளி - 15 மாதம்.
கிர்
தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ
தார்பர்கர்
ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ – வணிக பால் பண்ணை: 2500 கிலோ
சிவப்பு சிந்து
பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ – வணிக பால் பண்ணை : 1900 கிலோ
கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்
ஓங்கோல்
ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - 1500 கிலோ
வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.
ஹரியானா
கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்திய பிரதேசம்
பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ
வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.
கங்ரெஜ்
குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ - வணிக பால் பண்ணை : 3600 கிலோ
36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.
கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்
காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.
டியோனி
ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.
பண்ணை வேலைக்கான இனங்கள்
அம்ரித்மஹால்
கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.
உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.
ஹல்லிகார்
கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
காங்கேயம்
தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.
அயல்நாட்டு கறவை இனங்கள்
ஜெர்சி
26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.
கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்
பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ
ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.
ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.
இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்
இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.
பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ
பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.
டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.
எருமை இனங்கள்
முர்ரா
ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.
பால் உற்பத்தி - 1560 கிலோ
சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது
ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.
கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்
சுர்த்தி
குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ
ஜப்ராபதி:
குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது
பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ
நாக்பூரி
நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)
பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ
கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை
கறவை மாடுகளின் தேர்வுகறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.
அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.
அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்
கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.
வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள்
இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும். இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 : 50 அல்லது 40 : 60 என்ற விகிதத்தில்). எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய பால் தேவை. எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.
உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும். ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும். மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.
வணிக ரீதியான பண்ணைக்கான மாடு . எருமைகளை தேர்வு செய்யும் முறை
பசுமாடுகள்
ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது. (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000)
நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது.
கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.
பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது. இது எருமைப் பாலைவிட சற்று குறைவாக உள்ளது.
எருமைகள்
மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.
பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது. இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.
எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம். இதனால் செலவு குறைகிறது.
எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது. மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது. காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.
எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை.
ஆதாரம்: பெய்ஃப் டெவலப்மென்ட் ரிசர்ச் பெளன்டேசன், பூனா. இந்தியா

கால்நடை தீவனப் பிரச்சனைகள்

கால்நடை தீவனப் பிரச்சனைகள் கடுமையாககி வருகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதுடன். அதிக பால் தேவைக்காக கால்நடை வளர்ப்பு அதிகரிப்பதால், மேய்ச்சல் அதிகரித்து புல்வெளி சூழலமைவுகள் சீர்குலைந்து வருகின்றன. பல இடங்களில் மேய்ச்சல் நிலம் வெகுவாக குறைந்துவிட்டதால் கால்நடை வளர்ப்பவர்கள் இரசாயன தீனிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது பால் தயாரிப்பு விலையை உயர்த்துவதுடன் பாலில் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் இரசாயனப்பொருட்கள் உடலில் ஏறவும் வழிவகுக்கிறது. மேலும் நகரப் புறங்களிலும் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் எவ்வித மேய்ச்சல் நிலங்களும் நல்ல தீவனங்களும் இன்றி நகர்ப்புற கழிவுகளை உண்டு வருகின்றன. இத்தகைய பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலின் தரத்தில் இருக்கும் மோசமான இரசாயனப்பொருட்களின் விளைவு நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். கிராமங்களில் வறுமையும் நிலமின்மையும் கால்நடை வைத்திருப்போரைப் பீடித்திருக்கும் நோய்களாகும். கிராமங்களில் வாழும் 63 கோடி மக்களில் 40 சதவிகிதத்தினரின் வருவாய் வறுமைக்கோட்டு வரையறைக்கு கீழே உள்ளது. கிராமவாசிகளில் 70 சதவிகித மக்கள் கால்நடைகள் வைத்துள்ளதுடன் அவர்களது வருமானத்தில் 20% கால்நடைகள் மூலமாக கிட்டுகிறது. இவ்வாறு கால்நடை வைத்திருப்போரில் மூன்றில் இரண்டு பங்கு நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளே ஆவர். விவசாய பக்கப் பொருளான வைக்கோல் மாட்டுத்தீவனமாக பயன்பட்டுவந்தது. அது குறைந்து வருகிறது. அதிக மகசூல் அளிக்கும் தானியவகைகளில் தீவன வைக்கோல் அளவு குறைந்து வருகிறது. இதனால் கால்நடை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் இரசாயனத் தீவன்ப் பொருட்களுக்கு தள்ளப்படுவார்கள். அதிக ஆற்றல் பயன்பாட்டால் உருவாக்கப்படும் இத்தகைய இரசாயன தீவனங்கள் அதிக ஆற்றல் மற்றும் பொருட்செலவுகளில் உருவாக்கப்படுபவை. எனவே இவற்றிற்கு அரசாங்கமே சலுகைவிலை நிர்ணயிக்க வேண்டிய நிலையும் அது ஒரு அரசியல் கருவியாகவும் கூட பயன்படும் நிலை வரலாம். இவையெல்லாம் தேசிய பொருளாதாரத்திற்கு நீண்ட நோக்கில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துபவை என்பதைக் கூறத்தேவையில்லை. இன்று தனியாரிடத்தில் 71 இரசாயன தீவன ஆலைகளும் பால் கூட்டுறவு சங்கங்களிடம் 44 ஆலைகளுமாக, 27 இலட்சம் டன்கள் இராசாயன தீவனத்தை உற்பத்தி செய்கின்றன. எனினும் பாரதத்தின் முழுமையான கால்நடை தீவன பயன்பாட்டில் இது 3 சதவிகிதமேயாகும். எனவேதான் சர்வதேச FAO அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று பாரதச் சூழலில் 'புதிய (ஆலை) மரபு சாரா தீவன முறைகளை கண்டுபிடித்து அவற்றின் தீவன செழுமையை மேம்படுத்துவது அவசியமான ஒன்று ' என வலியுறுத்துகிறது.

கால்நடை வளர்ப்பில் தாரளமயம்

இந்தியாவின் காடுகளிலுள்ள சிங்கம் புலி நரி ராஜநாகம் முதலான விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருவதாக ""அவுட்லுக்'' என்ற ஆங்கில வார ஏடு அண்மையில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. காடுகளிலுள்ள அரிய விலங்கினங்கள் மட்டுமல்ல; நாட்டிலுள்ள கால்நடைச் செல்வங்களும் படிப்படியாக அழிந்து வருவதோடு இனி இந்திய ஆடுமாடுகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்க முடியும் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் இறைச்சிக்காக ஆடு மாடுகளைக் கொல்வதால் அவை அழிந்து வருகின்றனவா என்றால் இல்லை; அல்லது ஏதாவது கொள்ளைநோய் தாக்கி வருகிறதா என்றால் அதுவும் இல்லை. மாறாக இது கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கையால் உருவான பேரழிவு. உலக வங்கி உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி ஆட்சியாளர்கள் பின்பற்றி வரும் தாராள இறக்குமதிக் கொள்கையால் இந்நாட்டின் கால்ந டைச் செல்வங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு கால்நடை வளர்ப்புத் தொழிலைச் சார்ந்துள்ள பல கோடி விவசாயக் குடும்பங்களை ஓட்டாண்டிகளாக்கும் சதி வேகமாக நடந்தேறி வருகிறது.

கால்நடைச் செல்வத்தில் உலகிலேயே இந்தியா முன்னணியில் உள்ளது. 28 கோடி மாடுகளைக் கொண்டு 8 கோடியே 40 லட்சம் டன் பால் உற்பத்தி செய்து எண்ணிக்கையிலும் உற்பத்தியிலும் இந்திய நாடு முதலிடம் வகிக்கிறது. 46இ830 கோடி ரூபாய் மதிப்புள்ள பால் பொருட்கள் சந்தையை ஈடு செய்வதோடு ஏற்றுமதி செய்யுமளவுக்கும் உற்பத்தி பெருகியுள்ளது.

இன்னொருபுறம் வெள்ளாடு மற்றம் செம்மறியாடு வளர்ப்பில் உலகளவில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. 18 கோடி எண்ணிக்கையைக் கொண்ட ஆடு வளர்ப்புத் தொழில் ஆண்டு ஒன்றுக்கு 2400 கோடி ரூபாயை ஈட்டித் தருகிறது.

இந்திய விவசாயிகள் ஆடுமாடு வளர்ப்பதென்பது அவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரம். ஏறத்தாழ எட்டு கோடி விவசாயப் பெண்கள் ஓரிரு மாடுகளை வைத்துப் பால் உற்பத்தியில் ஈடுபட்டுத் தமது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களிலுள்ள 70 சதவீத கால்நடைகள் நிலமற்ற கூலிஏழை விவசாயிகளிடமும் நடுத்தர விவசாயிகளிடமும்தான் உள்ளது. கால்நடை சார்ந்த பொருட்கள் இக்கிராமப்புற விவசாயிகளின் ஆண்டு வருமானத்தில் 20 முதல் 70 சதவீதம் வரை பங்களிக்கிறது. இயற்கை பொய்த்துப் போகும்போதும் விவசாய விளைபொருட்களின் விலை சந்தையில் வீழ்ச்சியடையும் போதும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுத்து காப்பவை இக்கால்நடைகள்தான். கிராமப்புறங்களில் அவசரத் தேவைக்கான வங்கிகளாக இருப்பவை இக்கால்நடைச் செல்வங்கள்தான்.

ஆனால் மேலை நாடுகளில் கால்நடை வளர்ப்பு என்பது இயந்திரமயமாக்கப்பட்ட பெருவீதத் தொழிலாகும். அங்கு முதலாளித்துவப் பண்ணையாளர்கள் பல ஆயிரம் மாடுகளைக் கொண்ட பண்ணைகளைக் கொண்டு பால் மற்றும் இறைச்சியை உற்பத்தி செய்து குவிக்கின்றனர். அந்நாடுகளின் அரசுகள் பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் 60 முதல் 100 சதவீதம் வரை மானியம் அளிக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களே இத்தொழிலைக் கட்டுப்படுத்தி இயக்குகின்றன. அவற்றின் இலாபவெறி அராஜகத்தால் மிதமிஞ்சிய பால் மற்றும் இறைச்சி உற்பத்தி அந்நாடுகளில் மலைபோல் குவிந்துள்ளன.

உதாரணமாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் தமிழகத்தை விட சிறிய நாடான சுவிட்சர்லாந்து ஆண்டொன்றுக்கு 380 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. ஏறத்தாழ 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 475 லிட்டர் (இந்தியாவில் 80 லிட்டர்) பால் கிடைக்கிறது. இது அவர்களின் தேவைக்கு மிதமிஞ்சியதாகும். எனவே சுவிஸ் அரசு பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு பண்ணையும் எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ""கோட்டா'' முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவை மீறாமலிருக்கவும் மிதமிஞ்சிய உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியமும் அளிக்கிறது. இதேபோலத்தான் இதர ஏகாதிபத்திய நாடுகளிலும் நடக்கிறது.

மிதமிஞ்சிய உற்பத்தியின் விளைவாக பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு விற்பனையில் தேக்கமும் ஒப்பீட்டளவில் இலாபம் குறைவதும் ஏற்படுவதால் அவை புதிய சந்தைகளைக் கைப்பற்ற வெறியோடு அலைகின்றன. ஏழை நாடுகளை அவற்றின் புதிய சந்தைகளாக மாற்றுவதற்கான சதிகள் பல அரங்குகளிலும் நடக்கின்றன. ஏழை நாடுகளின் சந்தையைக் கைப்பற்றுவதற்கு முக்கியமான தடைகளாக இருப்பவை உள்ளூர் கால்நடை வளர்ப்புத் தொழிலும் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகளும்தான். இவ்விரண்டு தடைகளையும் தகர்ப்பதன் மூலம்தான் ஏழை நாடுகளின் சந்தையைக் கைப்பற்ற முடியும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்தியவாதிகளும் வஞ்சக வலைவீசி ஏழை நாடுகளை அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ளனர்.

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி கடந்த 1999ஆம் ஆண்டின் இறுதியில் பா.ஜ.க. ஆட்சியில் பால் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டு 1இ429 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதற்கு முன்னதாகவே ""இன்டர் கார்ப்பரேஷன்'' என்ற பன்னாட்டு தன்னார்வக் குழு கால்நடை வளர்ப்புத் தொழிலைச் சிதைக்க களத்தில் இறங்கியது.

இத்தன்னார்வக் குழு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று வருகிறது. 1996ஆம் ஆண்டில் மத்திய கால்நடைத் துறை செயலகத்துடன் கூட்டுச் சேர்ந்து ""தேசிய கால்நடைக் கொள்கை''யை உருவாக்கியது. மேலும் அண்மையில் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களின் கால்நடைக் கொள்கையை உருவாக்குவதில் பிரதான பங்காற்றியது. கொள்கைகளை வகுப்பது மட்டுமின்றி அவற்றைச் செயல்படுத்துவதற்கான முறைகள் வடிவங்களைப் புகுத்துவதிலும் இத்தன்னார்வக் குழு வெற்றி பெற்றது. கால்நடை பராமரிப்புத் துறையின் சேவைகளான மருத்துவம் செயற்கை முறை கருவூட்டல் (சினை ஊசி) மற்றும் நோய் தடுப்பியல் சேவைகளைத் தனியார்மயமாக்குவதும் கால்நடை பராமரிப்புத் துறையின் இதர சேவைகளைக் கட்டண சேவையாக மாற்றுவதுமே இந்தப் புதிய தேசிய கால்நடைக் கொள்கையின் பிரதான அம்சங்களாகும்.

இத்தனியார்மயக் கொள்கையால் மிகப் பெரிய அளவில் பெய்ஃப் என்ற தன்னார்வக் குழு ஆதாயமடைந்தது. இத்தன்னார்வக் குழு 2004ஆம் ஆண்டின் இறுதியில் 11 மாநிலங்களில் ஒரு லட்சம் கிராமங்களில் கால்நடைகளுக்குச் செயற்கை முறை கருவூட்டல் சேவையை மத்திய அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளது. இச்சேவைக்காக விவசாயிடமிருந்து ஒவ்வொரு முறையும் சராசரியாக ரூ. 100 வசூலித்து வருகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் இத்தன்னார்வக் குழு மிகப்பெரிய ஏகபோக முதலாளித்துவ நிறுவனமாகப் பரிணமித்து விடும்.

இத்தகைய கொழுத்த ஆதாயத்தைக் கண்டு ஜே.கே. குழுமமும் (ரேமண்ட் ஆடை நிறுவனம்) களத்தில் குதித்துள்ளது. இந்நிறுவனம் 7 மாநில அரசாங்கங்களிடமிருந்து செயற்கை முறை கருவூட்டல் சேவையைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. விவசாயிகளிடமிருந்து இதற்காக கட்டணம் வசூலிப்பதோடு மாநில அரசுகளிடமிருந்தும் இச்சேவைக்காக இந்நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இவர்களின் "சேவை'யினால் ஒரு மாடு சினை பிடித்தால் அரசு ரூ. 860 தரவேண்டும்; ஒரு கன்று பிறந்தால் ரூ. 3000 தரவேண்டும். ஆனால் சந்தையில் 6 மாத வயதான ஒரு கன்றுக்குட்டியின் விலை ரூ. 1000 கூட போகாது. இப்படி இந்த "மகத்தான' சேவையினால் மட்டும் கடந்த ஆண்டில் ஆந்திராவின் சித்தூர் அனந்தபூர் மாவட்டங்களில் மட்டும் 2 கோடி ரூபாய் நிகர லாபமாக இந்நிறுவனம் சுருட்டியது. இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரூ. 2 கோடி இலாபம் எனில் ஆந்திர மாநிலம் முழுவதும் சுருட்டிய இலாபம் எவ்வளவு கோடி? ஆந்திரா மட்டுமின்றி 7 மாநிலங்களில் விழுங்கியது எத்தனை கோடி? ப. சிதம்பரத்துக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்! குறைந்தபட்ச மதிப்பீட்டின்படி ரூ. 1400 கோடிக்கு மேல் ஜே.கே. நிறுவனம் சுருட்டியிருக்கும்!

இன்னொரு புறம் ஏகாதிபத்தியங்களிடமிருந்து எச்சில் காசு பெற்றுக் கொண்டு ""சூழலியல்வாதிகள்'' என்கிற பெயரில் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை வனப்பாதுகாப்புத் துறையுடன் கைகோர்த்துக் கொண்டு ""புதிய வனப் பாதுகாப்புக் கொள்கை''யைத் திணித்து வருகின்றன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் இச்சூழலியவாதக் குழுக்கள் ""மேய்ச்சல் கொள்கை''யை உருவாக்கிச் செயல்படுத்தின. காடுகளில் கால்நடைகளை மேயவிடக் கூடாது; வெள்ளாடுகள் குருத்து இலைகளைத் தின்று காடுகளின் நீடித்த தன்மையை அழிக்கின்றன என்பதுதான் இக்கொள்கையின் பிரதான அம்சம். இதன் விளைவாக மலைவாழ் வனவாழ் மக்கள் இனி வெள்ளாடுகளை வளர்க்க முடியாது. இயற்கை வளத்தின் மீதான அவர்களின் உரிமையும் வாழ்வுக்கான ஆதாரமும் பறிக்கப்படும். விவசாயிகளது உடலின் நீட்டிப்பாக உள்ள கால்நடைச் செல்வங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.

இவை ஒருபுறமிருக்க புவிப்பரப்பு கூடுதலாக வெப்பமடைவதற்கு மீத்தேன் வாயுவும் ஒரு காரணமாகும். ஏகாதிபத்திய நாடுகளின் இயந்திரமயமாக்கப்பட்ட கால்நடைப் பண்ணைகளிலிருந்துதான் அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறுகிறது. சுற்றுச்சூழலை நஞ்சாக்கி வரும் ஏகாதிபத்தியவாதிகள் இக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும் திசை திருப்பவும் தமது கைக்கூலி விஞ்ஞானிகளைக் கொண்டு புதிய சதிகளில் இறங்கியுள்ளனர். ""இந்தியாவில் அளவுக்கதிகமாக அசைபோடும் கால்நடைகள் உள்ளன. இவை நார்ச்சத்து நிறைந்த வைக்கோல் புல் சோளத்தட்டு முதலான தீவனங்களைக் கொண்டு வளர்கின்றன. எனவே இந்தியக் கால்நடைகள்தான் அதிகஅளவில் மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன. அவைதாம் புவிபரப்பின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். ஆகையால் இந்தியக் கால்நடைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று கைக்கூலி இந்திய விஞ்ஞானிகள் சிலர் வாதிட்டு வருகின்றனர். அமெரிக்கா சொன்னால் அது வேதவாக்கு! அதன்படி வருங்காலத்தில் இந்திய ஆட்சியாளர்கள் மீத்தேன் வாயுப் பெருக்கத்தைக் குறைப்பது என்ற பெயரில் இந்தியக் கால்நடைகளைக் குறைக்க முயலுவார்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து பால் பொருட்கள் வெள்ளமெனப் பாய்கின்றன. டென்மார்க் நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து கடந்த 2002ஆம் ஆண்டில் மட்டும் 17000 டன் பால்பவுடரும் 12000 டன் நெய்யும் இறக்குமதியாகியுள்ளது. இந்திய அரசின் அன்னிய வணிக இயக்குநரகத்தின் (ஜூன் 2004) அறிக்கையின் படி 200203 ஆம் ஆண்டில் ரூ. 688 கோடியாக இருந்த பால் சார்ந்த பொருட்களின் இறக்குமதி மதிப்பு 200304 ஆம் ஆண்டில் ரூ. 10இ000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவும் போதாதென்று முந்தைய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்போது சலுகை இறக்குமதி தீர்வையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10இ000 டன் பால்பவுடர் இறக்குமதி வரம்பை 15 மடங்கு (1இ50இ000 டன்) உயர்த்தியது.

நியூசிலாந்திலிருந்து வந்திறங்கும் ஒரு கிலோ நெய்யின் விலை ரூ. 64.54. சுவிஸ் நாட்டின் நெஸ்லே பிரான்சைச் சேர்ந்த சோடியால் பான்கிரைன் லேக்டாலிஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஷ்ரெய்பர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஃபான்டெரா முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் ஒரு கிலோ பால் பவுடரை ரூ.30 முதல் ரூ.50 வரை கொண்டு வந்து கொட்டுகின்றன. இந்தப் பால்பவுடரைக் கொண்டு பலதரப்பட்ட விளம்பர வித்தைகளுடன் பல வண்ண பாலிதீன் பாக்கெட்டுகளில் ஆரோக்யா ஹெரிடேஜ் கோமாதா திருமலா தூத் எனப் பல பெயர்களில் இந்தியத் தரகு முதலாளிகள் பால் விற்பனையை பெருநகரங்களில் விரிவுபடுத்தி வருகின்றனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் பால் நகரப்புற சந்தையில் ஏறத்தாழ 65மூ ஆக இருந்த நிலைமை போய் இன்று பாதிக்கும் கீழாக வீழ்ந்ததற்கு முக்கியக் காரணம் இறக்குமதியாகும் பால்பவுடர்தான்!

ஏகாதிபத்திய நாடுகளில் பால் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவு மானியங்கள் வழங்கப்படுவதால் அந்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் விலை மலிவாக இருக்கின்றன. இந்தியாவிலோ பால் உற்பத்திக்கு அரசாங்கம் மானியம் தருவதில்லை. சிறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் ""மாட்டு லோன்'' வாங்கவே படாதபாடு படவேண்டியுள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து கட்டுப்பாடின்றி பால் பொருட்கள் இறக்குமதியானால் அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் பால் பொருட்களை இந்திய சிறு விவசாயிகளால் விற்பனை செய்ய இயலாது. கால்நடை வளர்ப்புத் தொழில் அதிக முதலீடுகளைக் கோருவதாலும் தீவனப் பொருட்களின் விலையேற்றத்தாலும் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ரூ. 6.50 முதல் ரூ. 10.75 வரை தேவைப்படுகிறது. ஆனால் இந்த அடக்கவிலைக்கேகூட விவசாயிகளால் பாலை விற்க முடியாமல் நட்டப்பட்டுப் போண்டியாகி வருகிறார்கள். ஒரு கிலோ ரூ.100 120 என்றிருந்த உள்நாட்டு நெய்யின் விலை இன்று ரூ. 85 102 என்று வீழ்ச்சியடைந்து விட்டது.

ஒருபுறம் கால்நடை இனப்பெருக்கச் "சேவை'யில் தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சுரண்டல்; மறுபுறம் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் மேய்ச்சல் நிலங்களில் விவசாயிகளின் உரிமை பறிப்பு; இன்னொருபுறம் கணிசமாக கால்நடைத் தீவனங்களின் விலையேற்றம்; எல்லாவற்றுக்கும் மேலாக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மலிவு விலையில் வெள்ளமெனப் பாயும் பால் பொருட்கள். இத்தகைய தொடர் தாக்குதல்களால் இந்தியக் கால்நடை வளர்ப்புத் தொழில் படிப்படியாக நசுக்கப்பட்டு வருகிறது.

இனி ஆடுமாடு வளர்ப்பதும் பால் உற்பத்தியில் ஈடுபடுவதும் யானையைக் கட்டி தீனி போடும் கதையாக கிராமப்புற மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும். போண்டியாகும் விவசாயிகள் படிப்படியாக ஆடுமாடுகளை விற்றுவிடுவார்கள்; பால் உற்பத்தியில் ஈடுபடவும் முன்வரமாட்டார்கள். இதன் விளைவாக பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்; அதற்கேற்ப ஏகாதிபத்திய நாடுகளும் பால் விலையை உயர்த்தும். இந்தியாவில் சுயசார்புடன் பால் உற்பத்தியே இல்லாமல் போய் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பாலை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விடும். பாலைக் கொண்டே ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்திய நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தி கொள்ளையடித்துச் செல்லும். இத்தகைய வழிமுறைகளின் மூலம்தான் ""நெஸ்லே'' என்ற பன்னாட்டு நிறுவனம் அண்டை நாடான இலங்கையில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பால் கால்நடைகள் விவசாயம் கைத்தொழில் என அனைத்தையும் நாசமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்கும் கொள்ளைக்கும் ஆதிக்கத்துக்கும் தாராள அனுமதியளிக்கும் ஆட்சியாளர்களின் தனியார்மய தாராளமயக் கொள்கையை இனியும் சகித்துக் கொள்ளப் போகிறோமா? கால்நடைச் செல்வங்கள் மிகுந்த விவசாய நாடான இந்தியாவைப் பாலுக்கும் உணவுக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடம் கையேந்த வைக்கும் தன்னார்வக் குழுக்களின் சதிச் செயலை நாட்டை அடிமைப்படுத்தும் துரோகத்தனத்தை இனியும் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது ""அர்ஜூன் அம்மா யாரு?'' ""4.5மூ கொழுப்பு சத்துள்ள பால்தான் உண்மையான பால்'' என்ற விளம்பரங்களில் மயங்கி இறக்குமதியாகும் பால் பவுடரைக் கொண்டு பலவண்ண பாலிதீன் பைகளில் விற்கப்படும் பாலைக் குடித்து அடிமைகளாகக் கிடக்கப் போகிறோமா?

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும்.கால்நடைகளுக்கான முதலுதவிகள்1. காயங்கள்கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும். சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர் துளை போடவும். பின் கால்நடை மருத்துவரை அணுகவும்.உடலில் புண் இருந்தால் ஈ முலம் புழுக்கள் உண்டாகி காயத்தை ஆழமாக்கி விடும்। இதற்கு கற்பூரத்தை பொடி செய்து வைக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயை புண்ணின் மீது தடவலாம்.
2 எலும்பு முறிவு
எதிற்பாராத விபத்தினால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்ப்படத வகையில் மூங்கில், துணி கொண்டு கட்டுப்போட வோண்டும்। பின்னங்கால் தொடை எலும்பு முறிவு ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்வது கடினம். எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஒருசேர இருப்பின் அந்த காயங்களுக்கு கட்டுப்போட கூடாது. உடனே மருத்துவரை அணுகவும்.
3. கொம்பு முறிதல்
மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போதோ கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக் கொம்பு முறிதல் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவியபின் களிம்பு தடவலாம்.இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்சர் பென்சாயின் ஊற்றவும். கொம்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஈரம் மற்றும் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் பட்ட இடத்தில் துற்நாற்றம் ஏதேனும் வருகிறதா என கவனமாக கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உடனே மருத்துவரை அணுகவும்.
4 இரத்த கசிவு
கைகளை சுத்தமான நீர் அல்லது சோப்பால் கழுவி விட்டு இரத்தம் வரும் இடத்தில் விரல்களை வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும்। இரத்த கசிவு அதிகமாக இருந்தால் சுத்தமான துணி கொண்டு கட்டுப் போடலாம்.
5. தீக்காயம்
கால்நடை கொட்டகைகள் தீப்பிட்டிப்பதால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். கால்நடைகளின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால் அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றவும். கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்லவும்.
6. இரசாயன திரவங்களால் ஏற்படும் காயங்கள்
இரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால் தோல், தசை முதலியன வெந்துவிடும். அமில வகைத் திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்புத் தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்। எந்தவகை இரசாயனம் எனத் தெரியாவிட்டால் நிறைய சுத்தமான தண்ணீர் கழுவ வேண்டும்।
7 மின்சார அதிர்ச்சி
கால்நடைகளின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் நினைவு இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு। சில வேளை காயங்கள் ஏற்படாலாம். கால்நடைகளுக்கு மின் தாக்குதல் ஏற்பட்டால் உடனடிக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பின்பே அருகில் செல்ல வேண்டும். கால்நடை கொட்டகையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின் கம்பங்களிலோ அல்லது அதன் அருகிலோ கட்டுவதை கண்டிப்பாக தவிர்க வேண்டும்.
8. அதிக உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிர்ச்சி
வெயில் காலங்களில் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத காரணங்களினால் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். எனவே கால்நடைகளை கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் நிழலில் கட்டிவைக்க வேண்டும்.கோடைகாலத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் மேய்சலுக்கும் பிற வேலைகளுக்கும் அனுப்பலாம். வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப் பட்ட கால்நடைகளின் மீது ஈரத்துணி மற்றும் பனி(ஐஸ்) கட்டிகளை வைத்து உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம்.
9. வயிறு உப்புசம்
தீவனத்தை திடீரென மாற்றுவதாலோ அல்லது பயறுவகை தீவனத்தை அதிகமாக உட்கொண்டதாலோ வயிறு உப்புசம் ஏற்படலாம். இதற்க்கு கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250 மி.லி வாய் வழியெ ஊற்ற வேண்டும்.எண்ணெயுடன் சோப்புத்தண்ணீர் 60 மி.லி வாய் வழியாக கொடுக்கலாம். மருந்து ஊற்றும் போது புறை ஏற்படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.வயிறு உப்புசம் அதிகமாயின் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.இவைமட்டும் அல்லாமல் உள்வயிறு சுழன்று கொள்வது, புளித்த உணவை அதிகமாக உட்கொள்வது, உண்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றாலும் வயிறு உப்புசம் ஏற்படலாம்।
10 அமில நச்சு
மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றை அதிகமாக உண்பதால் இந்நச்சு பாதித்து கால்நடைகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உயிர்சேதமடைந்துவிடும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத் தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி காயவைத்து கொடுக்க வேண்டும்.மீந்து போன அரிசி – சாதம், அழுகிய வாழைப்பழம், தானியங்களை அதிகமாக உட்கொள்வதால் வயிறு உப்புசம் ஏற்படலாம். இதனால் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். இதற்கு 100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்கவும். உடனே கால்நடை மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வயிற்றுப் போக்கு மருந்து கொடுக்க வேண்டும்.
11 யூரியா நச்சு
தவறுதலாக யூரியாவை மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கலப்பதாலோ, அல்லது யூரியா உரமிட்ட வயலில் தண்ணீர் குடிப்பதாலோ யூரியா நச்சு ஏற்படலாம்। வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகியன முக்கிய அறிகுறிகள்। முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு வினிகர்( 2 முதல் 4 லிட்டர் வரை பிரித்து) கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்
12.நஞ்சுத் தன்மை
கால்நடைகள் நஞ்சுத் தன்மையுடைய செடிகளையோ, பூச்சி மருந்துகளை எதிரபாரமல் உட்கொள்வதாள்லோ, பூச்சி கொல்லி மருந்து டப்பாகளை நாக்கினால் நக்குவதாலும் மற்றும் பூச்சி மருந்து தெளித்த பயிரை உட்கொள்வதாள்லோ உடம்பில் நஞ்சுத் தன்மை ஏற்படலாம்। அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டு இறப்பு நீகழ வாய்ப்புண்டு.முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். நஞ்சு வயிற்றில் தங்காமல் இருக்க சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாயின் வழியாக கொடுக்கலாம். அடுப்புக் கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றலாம்.
13.வெறிநாய் கடி
எல்லா வெப்ப ரத்த விலங்குகளுக்கும் இந்நோய் வரும். இவ்வியாதியுள்ள ஒரு விலங்கின் உமிழ் நீரில் கருமி வெளியேறுகிறது. வியாதியுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது ஒன்றாய் உள்ள விலங்கின் உடம்பில் ஏதேனும் புண்ணிருந்து அதை நக்கினாலோ இக்கிருமி உடம்புக்குள் புகுந்துவிடும். அந்த சதைபகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக தண்டுவடம் மற்றும் மூளையை அடைகிறது. 10 நாள் முதல் 7 மாதத்திற்குள் நரம்பு நோய் வந்து மரணம் அடையும்.இதன் அறிகுறிகள் கண்டவரை எல்லாம் கடிக்க வரும், கண்ணில் பட்டதையெல்லாம் தின்ன முற்படும், கீழ்தாடை தொங்கும்। உமிழ் நீர் நூலாய் வழியும். சில நாட்கள் கழித்து உறுப்புகள் செயலிழந்து அமைதியாகிவிடும். இவ்வியாதியுள்ள விலங்கினை தனியே அடைத்துவிடவும். கையுரை அணியாமல் விலங்கினை தொடக்குடாது. கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு உடனே மருத்துவரை அணுகவும். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போடப்படும்.
14. பாம்பு கடி
பாம்பு கடி என்றால் ரத்தப் போக்கை கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டுவிடலாம். காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வோண்டும். பாம்பு கடி என்பதன் அறிகுறிகள் நிற்க முடியாமல் கீழே விழுதல், எழவும் முடியாது. வாந்தி, . உமிழ் நீர் வழியும், மூச்சுவிட சிரம்ப்படும். சிறுநீரில் இரத்தம், காயத்திலிருந்து தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடனே மருத்துவரை அணுகவும்.15.தொண்டை அடைப்பு
மாடு அல்லது ஆட்டின் தொண்டையில் ஏதாவது அடைத்துவிட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்துவிடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கை கிழே அழுத்திக் கொண்டு வாயிக்குள் இடுக்கி கொண்டு அடைப்பை எடுத்துவிடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். கவனிக்காவிட்டால் மாடுகள் 4 அல்லது 5 மணி நேரத்தில் இறந்துவிடும்.16.கருப்பை வெளித்தள்ளுதல்.
சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்திலோ அல்லது கன்று ஈன்ற பின்போ கருப்பை வெளியே வாய்ப்புண்டு। இதனைத் தடுக்க ஒரே சமயத்தில் அதிக தீவனம் அல்லது தண்ணீர் கொடுக்க கூடாது. மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின் புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால் மண் மற்றும் தூசுகள் படாமல் இருக்கவும், உலர்ந்துவிடாமல் இருக்கவும் சுத்தமான ஈரத்துணியை போர்த்தி வைக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.முதலுதவி பெட்டிவிபத்துகள், நோய்கள் என்பவை முன் அறிவிப்பின்றி வருவது। எனவே அவசர உதவிக்காக முதலுதவி பெட்டி ஒவ்வொரு கால்நடை பராமரிபாளர் வீட்டிலும் இருக்க வேண்டும். அதில் இருக்க வேண்டிய மருந்துகள் பின்வருமாறு,
· கட்டுத் துணி, கயிறு, பஞ்சு, ஒட்டுப் பட்டை(பிளஸ்திரி)· டெட்டால் அல்லது சாவ்லான், கத்தரி கோல்· டிங்க்சர் அயோடின், பீட்டாடுன் கலவை, டிங்க்சர் பென்சாயின்· கையுறை, வெள்ளை துணி,· பாராசிட்டாமால், அவில், பெரிநார்ம், அனால்ஜீன் மாத்திரைகள் அல்லது ஊசிகள்.· திசு காகிதம், வெப்ப மானி, டார்ச் லைட், பேனா, வெள்ளை தாள், சங்கிலி போன்றவைமுதலுதவி மட்டும் செய்து முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.தகவல் ஆதாரம்: உழவர் பயிற்சி மையம்.37, ஸ்ரீராம் நகர்,அல்லி நகரம், தேனி- 625 531தொலைபேசி; 954546260047நன்றி : தமிழக விவசாயி உலகம் (ஜூலை 2007 கட்டுரையிலிருந்து)

புதன், 6 ஆகஸ்ட், 2008

பால்பண்ணையே கதி



கி.பி. 1900ல் மார்ட்டின் என்ற ஏழ்மையான விவசாயி அமெரிக்காவிலுள்ள நியுயார்க்கில் வாழ்ந்து வந்தார். தேவபக்தியுள்ள மனிதர். ஆலயம் செல்வதில் தவறுவது இல்லை. தனக்கு வருமானம் உண்டாயிருக்க்கப் பால்மாடு ஒன்றை விலைக்கு வாங்கினார். பால்பண்ணை பெருகியது. பெரும் தனவந்தன் ஆனார். இறைவனை விட்டு விலகி, பால்பண்ணையே கதி என முழுவதும் அதிலே தனது நேரத்தைச் செலவு செய்தார்.

ஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு

ஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு
"வீட்டுல விசேஷம் வெச்சிருக்கேன். அதான் ரெண்டு மாட்டை விக்கலாம்னு..." -இது போன்ற உரையாடல்கள் கிராமத்து விவசாயிகளிடம் வெகுசகஜமான ஒன்று. விவசாயத்துக்கு மட்டுமல்ல... விவசாயிகளின் அவசரகால பணத் தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள்தான். அதனால்தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும் இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம். "பசு, எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத அமைதியான பிராணி. அதனால்தான் குதிரையைக் காட்டிலும் மனிதனால் அது அதிகமாக நேசிக்கப்பட்டு, அவனுடனேயே வாழும் ஒரு பிராணியாக இன்று வரை இருந்து வருகிறது. மனிதனுக்கு தேவைப்படாத உணவினை சாப்பிட்டு, பயனுள்ள பல பொருட்களை தருகிறது. அது தரும் பால் உணவாகிறது. கோமியமும், சாணமும் உரமாகிறது. ஆடும் அதே போலத்தான். இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தை மட்டும் செய்தால் லாபம் கிடைக்காது. கூடவே அதன் துணைத்தொழிலான கால்நடை வளர்ப்பினையும் கட்டாயம் செய்ய வேண்டும். பொதுவாக நூறு ஆடுகளை வளர்க்கும் ஒரு விவசாயிக்கு, ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட நூறு குட்டிகள் வரை கிடைக்கிறது. ஆடுகளோட கழிவுகளின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைக்கும். விவசாயத்தைக் காட்டிலும் கால்நடை வளர்ப்பு மூலம் மும்மடங்கு லாபம் எடுக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டால் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்தான் வருமானம் வரும். ஆனால், அதே நிலத்தில் ஐந்து பால் மாடுகள் வளர்த்தால் பால் வியாபாரம் மூலமாகவே கிட்டத்தட்ட 36 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுபோக சாணம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும். கன்றுகள் அதனினும் கூடுதல் வருவாயான ஒரு விஷயமே. ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம்தான் பிரச்னையாக இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் முறையாக பசுந்தீவனம் வளர்த்து ஐந்து மாடுகளையும் பராமரித்து வந்தால் அந்த விவசாயி வீட்டிலேயே நடமாடும் 'ஏ.டி.எம். மெஷின்' இருப்பது போலதான். உடனடி பணத்தேவைக்கு அவை நிச்சய கியாரண்டி'' என்று நம்பிக்கை தரும் சிரிப்போடு சொன்ன துணைவேந்தர், ''எங்கள் பல்கலைக் கழகத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றை சொல்லித் தருகிறோம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தாரளமாக பயிற்சி பெறலாம்'' என்றும் அழைப்பு வைத்தார். (தொடர்புக்கு: 044- 25551574) மதுரை மாவட்டம், மேலூரில் தமிழ்நாடு வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை பராமரிப்புத் துறை இருக்கிறது. இங்கே விவசாயிகளுக்கு ஆடு, மாடு வளர்ப்பு, பால்பண்ணை தொழில், வெண்பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு என பல பிரிவுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மதுரை\மேலூர் சாலையில், இருக்கும் இந்த ஆராய்ச்சி நிலையத்தில், ஒரு பால்பண்ணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தகுந்த தொழில் நுட்ப அடிப் படையில், சிறப்பான உள்கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது பால்பண்ணை. அங்கு பணியிலிருக்கும் கால்நடை பாராமரிப்புத் துறை பொறுப்பாளர் டாக்டர். பால் பிரின்சி ராஜ் குமாரிடம் நாம் பேசியபோது, "நம்ம மாநிலத்துல இருக்கற அரசு சார்ந்த சிறந்த பத்து பண்ணைகள்ல எங்களுடைய பண்ணையும் ஒண்ணு. எங்க காலேஜில் உள்ள விடுதிக்கும், குடியிருப்பு பகுதிக்கும் தேவைப்படுற அளவுக்கு பாலை இந்த பண்ணையில இருந்து எடுத்துக்கறோம். இங்க, நம்ம நாட்டு இனமான ரெட் சிந்தி, தார்பார்க்கர், கிர் மாடுகளும் வெளிநாட்டு இனமான ஹால்ஸ்டியன்\ பிரீசியன், ப்ரெளன் சுவிஸ், அயர்சையர், ரெட் டேன் மாடுகளும் இருக்கு. ஒவ்வொரு பசுவையும் அறிவியல் முறையில தனித்தனியா கவனிக்கறதால சராசரியா ஒவ்வொரு பசுவும் பத்துல இருந்து பதினைஞ்சு லிட்டர் வரைக்கும் கறக்குது. பால் உற்பத்திக்கு மட்டுமில்லாம, விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக் கவும் இந்த பண்ணை பயன்படுது. தமிழ்நாட்டோட பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவங்க இங்க இலவசமா பயிற்சி எடுத்திருக்காங்க. அதுல பல பேர் பெரிய அளவில வெற்றிகரமா பண்ணை நடத்திட்டு இருக்காங்க" என்று பண்ணையின் செயல்பாடுகள் பற்றி விவரித்தார். அடுத்து, நம்மிடம் பேசிய கால்நடை மருத்துவர் செல்வகுத் தாலிங்கம், ''பால் பண்ணை தொழிலில்ல பலர் தோத்துப் போறதா சொல்றாங்க. முறையா செஞ்சா பெரிய அளவிலான லாபம் கொடுக்கக்கூடிய தொழில் தான் இது. பொதுவா மாடு வளர்க்க ஆகுற செலவுல 70 % தீவனத்துக்குதான் போகுது. இவ்வளவு செலவு செஞ்சும் அதிக பால் கிடைக்கறது இல்ல. அதுனாலதான் நஷ்டம் வருது. அப்படி இல்லாம அறிவியல் பூர்வமா பண்ணையைக் கவனிச்சா நல்ல லாபம் ஈட்டலாம். அறிவியல் பூர்வம்னு சொன்னா மிரண்டுற வேணாம். சாதா ரணமா கடைகள்ல கிடைக்கற அடர் தீவனங்களை வாங்கி மாடுகளுக்குக் கொடுக்கும்போது உற்பத்தி செலவு கூடுது. ஆனா, புரத சத்து நிறைந்த பசுந்தீவனங்களை மிகக் குறைந்த செலவில் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தும்போது பால் உற்பத்தியும் அதிகரிக்கும், செலவும் குறையும். இங்க பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு பசுந்தீ வனங்கள் பயிரிடும் முறைகளையும் நாங்களே சொல்லிக் கொடுத்து, விதைக் கரணைகளையும் குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். பசுந்தீ வனங்களை முறையாக கொடுத்தாலே சராசரியா ஒரு பசு, பத்து லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கும். அதே போல பால் கறக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்ன தீவனம் கொடுக்கணும். அப்பதான் ஒரு மாடு கொடுக்கக்கூடிய பாலோட சராசரி அளவு தெரியும். சிறு விவசாயிகள், மாட்டை பத்தின விவரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்கறதில்லை. சினை பருவம், பால் அளவு, லாப-நட்ட கணக்கு எல்லாத்தையும் முறையா பராமரிக்கணும். இதெல்லாம்தான் அறிவியல் பூர்வமானமுறை. இதை மட்டும் ஒழுங்கா கடைபிடிச்சா நிச்சய லாபம்தான்" என்று அடித்துச் சொன்னார். 'மாடு இல்லா விவசாயமும்... மரம் இல்லா தோட்டமும் பாழ்' என்ற சொலவடையை நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். தொடர்பு முகவரி: கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேலூர் சாலை, மதுரை-625104. போன்: 0452-2422955.நன்றி: பசுமை விகடன்